×

மீண்டும் பாலித்தீன் பயன்பாடு தாராளம் ஆய்வுக்கு வரமறுக்கும் அதிகாரிகள்

காரைக்குடி, செப்.25:  காரைக்குடி பகுதிகளில் கடைகளில் பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்,  பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள். உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் உட்பட பல்வேறு பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது. தவிர ஒரு சில ஓட்டல்களில் தட்டுகளில் பாலித்தீன் விரிப்புகளை பயன்படுத்தி உணவு வழங்குகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்தி விட்டு முறையின்றி கண்ட இடங்களில் தூக்கி எறிகின்றனர்.

சாலையோர கடைகளில் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பொருட்கள் அனைத்தும் கால்வாய்களிலேயே கொட்டப்படுகிறது. இவை மக்கும் தன்மை இல்லாததால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. ஒருமுறையே பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கடினம். இவை மழைநீரை நிலத்திற்குள் செல்ல விடாமல் நிலத்தடி நீரை பெருக விடாமல் தடுக்கும். மக்கும் தன்மையற்ற பாலித்தீன் பொருட்களை பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. காரைக்குடி நகராட்சியின் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டும், சுகாதாரத்தினை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. சட்டம் கொண்டுவரப்பட்ட சில நாட்கள் அதிகாரிகள் ரெய்டு நடத்தி பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகள், விற்பனை நிலையங்களுக்கு அபராதம் விதித்தனர். பின்னர் நகராட்சி  அதிகாரிகளின் அலட்சிய போக்காலும், முறையான கண்காணிப்பு இல்லாததாலும் மீண்டும் விற்பனையில் களை கட்டுகிறது. அதேபோல் கடைகளில் பயன்பாடுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு