×

மீண்டும் தலை தூக்கும் பிளாஸ்டிக் வாழை இலை விற்பனை மந்தம்

அலங்காநல்லூர், செப். 25: அலங்காநல்லூர், கொண்டையம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி, தோடனேரி, வயலூர், வைரவநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக நடைபெறுகிறது. கடந்த ஆறு மாத காலமாக நிலவும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கி விட்டது. இந்த நிலையில் தொடரும் ஊரடங்கால் வாழை விவசாயத்தில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வாழைப்பழம், வாழைக்காய், வாழை இலை உள்ளிட்ட விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காத காரணத்தால் தோட்டத்திலேயே விளைபொருள்கள் வீணாகி வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை விதித்தபோது வாழை இலைக்கு நல்ல மவுசு இருந்ததது.

இதுகுறித்து வாழை விவசாயி சாமிநாதன் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்காமலும், கண்டுகொள்ளாமலும் விட்டு விட்டனர். இதனால் அனைத்து பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களில் மீண்டும் பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களை தடையின்றி வழங்கி வருகின்றனர். இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே, வாழை இலைக்கு மீண்டும் மவுசு குறைந்துவிட்டது. இதன் காரணமாக இலை விலையும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.


வாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை ஆகியவற்றை அறுவடை செய்யும் கூலிக்குக்கூட கட்டுபடியாகாத காரணத்தால் வாழை விவசாயிகள் பலரும் தோட்டத்திலேயே விளைபொருள்களை அறுவடை செய்யாமல் விட்டு விட்டனர். மேலும் வாழைத்தார் ஒன்றுக்கு தற்போது சராசரியாக 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரைக்கும், இலைக்கட்டு 200 ரூபாய முதல் விற்பனையாகிறது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வாழை விவசாயம் பிழைக்கும் என்று கூறினார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது