வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி நகல்களை கிழித்தெறிந்து மதுரையில் போராட்டம்

 மதுரை, செப். 25: விவசாயிகளை பாதிக்கும் வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக் கோரி மதுரையில் எஸ்டிபிஐ கட்சியினர் காய்கறிகளுடன் ஊர்வலமாக வந்து, நகல்களை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகியவை மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மத்திய பாஜ அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளை பாதிக்கும் இந்த மசோதாக்களை திரும்ப பெற கோரி எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து போராடி வருகின்றன.

இந்த மசோதாக்களை திரும்ப பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்டிலிருந்து மாவட்ட தலைவர் முஜிபூர் ரகுமான் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு நகல்களை கிழித்து எறிந்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியம், செய்தி தொடர்பாளர் சிக்கந்தர், 25 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கத்தரிக்காய், வெண்டைக்காய், பூசணி, முருங்கைகாய் போன்றவைகளை எடுத்து வந்தனர். ஆண்கள் தலையில் பச்சை துண்டினை தலைப்பாகையாக கட்டி வந்திருந்தனர்.

Related Stories: