×

மதுரை வனக்கோட்டத்தில் நான்கரை ஆண்டுகளில் 3 ஆயிரம் வழக்குப்பதிவு பணியாளர் பற்றாக்குறையால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

மதுரை, செப். 25: மதுரை வனக்கோட்டத்தில் பணியாளர் பற்றாக்குறையால் வனப்பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், நான்கரை ஆண்டுகளில் வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனச்சொத்துகளை சேதம் செய்த என 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட வனச்சரகத்தில் 3710 சதுர கி.மீ வனப்பகுதி உள்ளது. இந்த வனக்கோட்டத்தில் உசிலம்பட்டி, சோழவந்தான், மதுரை என வனஉயிரின சரகங்கள் உள்ளன. இவைகளில் அரிய வகை உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனச்சொத்துக்களை சேதம் செய்தல், திருட்டு வழக்குகள் என கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,231 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மதுரை சரகத்தில் 2,260 வழக்குகள், உசிலம்பட்டி சரகத்தில் 616 வழக்குகள் பதிவாகியுள்ளன. வனத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை குறைவால், முழுமையாக வனப்பகுதிகளை கண்காணிக்க முடிவதில்லை. இதனால், குற்றவாளிகள் எளிதாக தப்பித்து விடுகின்றனர். இதனால், குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மதுரை வனக்கோட்டத்தில் வனஅதிகாரி, கண்காணிப்பாளர், வனப்பாதுகாவலர் என 135 பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 100 பேருக்கும் குறைவாக உள்ளனர். வனப்பாதுகாவலர் பணியிடங்களில் பாதிக்குப்பாதி காலியாக உள்ளன. மிகக்குறைந்த பணியாளர்களே இருப்பதால், வனப்பகுதியை கண்காணிப்பது மிக சவாலாக உள்ளது. இதுகுறித்து மதுரை வனஆர்வலர்கள் கூறுகையில், ‘வனத்துறையில் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். வனக்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், சூழலைக் காத்து வளம் பெறும் வகையில் வனத்தை பாதுகாக்கும் திட்டங்களில் அரசு கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்’’ என்றனர்.

Tags : Madurai Forest Reserve ,case personnel ,
× RELATED மதுரை வனக்கோட்டத்தில் நான்கரை...