×

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாகனங்களில் சென்றால் ₹5 ஆயிரம் அபராதம்

ராசிபுரம், செப்.25: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிமீறி டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு, ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் மெகராஜ்  தலைமையில் நடந்தது. எஸ்பி சக்தி  கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில்  கலெக்டர் பேசியதாவது:

பள்ளிபாளையம், குமாரபாளையம்,  திருச்செங்கோடு, நாமக்கல் உட்பட்ட நகராட்சி பகுதிகளில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் எடுத்த விழிப்புணர்வு  நடவடிக்கை மூலம், கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ராசிபுரம்  நகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில், தொடர்ந்து கொரோனா நோய் தொற்று  அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் வருவதை  தவிர்க்க வேண்டும். கட்டாயம் முககவசம்  அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் டூவீலர் மற்றும் 4 சக்கர வாகனங்களில் விதிமீறி செல்பவர்களுக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ₹500 அபராதமும்,  முககவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் செல்பவர்களுக்கு  ₹500 அபராதம் விதிக்கப்படும். எனவே,  பொதுமக்கள் அனைவரும், கொரோனா தடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசுத்துறை களப்பணியாளர்கள் அனைவரும், 10 நாட்களுக்கு  ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் நாமக்கல் ஆர்டிஓ கோட்டைக்குமார், டிஎஸ்பி விஜயராகவன்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், நகராட்சி ஆணையர் (பொ) குணசீலன்,  தாசில்தார் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

* 2 வார்டுகளில் மினி
லாக்டவுன் :திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கலெக்டர் மெகராஜ் உத்தரவின்படி, 12வது வார்டு கூட்டப்பள்ளி, 26வது வார்டு மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் மினி லாக்டவுன் அமல்படுத்தி உள்ளனர். இங்கு தகர அட்டைகள் வைத்து யாரும் செல்ல முடியாத வகையில்  தனிமைப்படுத்தியவர்கள், அத்தியவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags : areas ,
× RELATED உயர்நீதிமன்ற ஊழல் தடுப்புப்பிரிவு...