×

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு லாரியை சிறைபிடித்து போராட்டம்

ஓசூர், செப்.25:  ஓசூரில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒசூர் காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியில், தனியாருக்கு சொந்தமான வீட்டின் மேல் தளத்தில், செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதியில், செல்போன் டவரை அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஒரு லாரியில் செல்போன் டவர் அமைக்க உதிரி பாகங்களை தொழிலாளர்கள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காமராஜ் நகரில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். மேலும், சிறுகுறு தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் செல்போன் டவர் அமைத்தால், மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும். எனவே, இதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,’ என்றனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர்.

Tags : cellphone tower ,
× RELATED செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் மறியல்