×

செல்போனுக்காக அண்ணனுடன் சேர்ந்து நாடகமாடியது அம்பலம் மாணவன் கடத்தலில் திடீர் திருப்பம்

வேட்டவலம், செப்.25: வேட்டவலம் அருகே புதிய செல்போன் வாங்குவதற்காக அண்ணனுடன் சேர்ந்து மாணவன் கடத்தல் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவன். அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வெளியே சென்ற மாணவன், பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், மாணவனின் செல்போனில் இருந்து அவரது உறவினர், நண்பர்களின் வாட்ஸ்அப்பில் ஒரு புகைப்படம் வந்தது. அதில் மாயமான மாணவன், கை, கால்களை கட்டி, முகத்தை துணியால் மூடியவாறு தரையில் கிடப்பது போன்று இருந்தது. மேலும், அதில் வந்த குறுஞ்செய்தியில் ₹5 லட்சம் கொடுத்தால் மாணவனை ஒப்படைப்போம், தவறினால் கொலை செய்துவிடுவோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், வேட்டவலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார், மாயமான மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் வீடு திரும்பினார்.
தகவலறிந்த டிஎஸ்பி அண்ணாதுரை, வேட்டவலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலட்சுமி, சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சுமன், சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அங்கு சென்று மாணவனிடம் விசாரித்தனர். அப்போது, மாணவன் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து கொண்டிருந்தான். போலீசாரின் தீவிர விசாரணையில், புதிய செல்போன் வாங்குவதற்காக அண்ணன் முறையான தனது சித்தி மகனுடன் (17 வயது) சேர்ந்து கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.

முன்னதாக, தகவலறிந்து போலீசார், மாணவன் மாயமான தேடிக்கொண்டு இருந்தபோது, கடத்தல் நாடகத்திற்கு உடந்தையாக இருந்த அவரது அண்ணனும், போலீசார் மற்றும் பெற்றோருடன் சேர்ந்து தேடுவதை போல் நடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கடத்தல் நாடகமாடிய 2 பேரையும் போலீசார் எச்சரித்ததுடன், பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும், அலட்சியமாக இருக்கக் கூடாது என அவரது பெற்றோர்களிடம் அறிவுறுத்தி விட்டு சென்றனர். புதிய செல்போனுக்காக மாணவன் தனது அண்ணனுடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : brother ,
× RELATED கிரிவலம் சென்று வந்தபோது சோகம்;...