காணொலியில் எளிதில் பாடங்கள் படிக்க மாணவர்களுக்கான தீக்ஷா செயலி பயன்பாடு அதிகரிக்க நடவடிக்கை

வேலூர், செப்.25: பாடப்புத்தகங்களில் கீயூஆர் ஸ்கேன் செய்து படிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தீக்ஷா செயலியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா தொற்று பரவல் சூழ்நிலை காரணமாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத நிலை உள்ளது. மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தால் பிளஸ்2 மாணவர்களுக்கான வீடியோவில் பாடங்கள் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதனை இலவசமாக வழங்கப்பட்ட லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீடியோ படப்பதிவுகள் உருவாக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆடியோ பாடப் பொருட்கள் உருவாக்கப்பட்டு வானொலி வாயிலாக ஒலிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்தே அவரவர் பாடத்திலுள்ள கியூஆர் ஸ்கேன் செய்து அதிலுள்ள காணொலியை கண்டும், கேட்டும், பாடக் கருத்துக்களை உள்வாங்கி புரிந்து கொள்ள ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதுசார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பின்வருமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதாவது, மாவட்டத்திலுள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் அவர்களது வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து கீயூஆர் ஸ்கேன் செய்து பாடக்கருத்துக்களை பெறச் செய்தல் வேண்டும்.

இவ்வாறாக மாணவர்கள் அதிக அளவில் பாடப்புத்தகங்களில் உள்ள கீயூஆர் ஸ்கேன் செய்து பயன்படுத்தும் நிலையில் தீக்ஷா இணையதளத்தில் நமது பயன்பாடு அதிகரிக்க இயலும். எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக இதற்கான முனைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு விவரங்களை சுற்றறிக்கை மூலமாக தெரிவித்திடவும் இதுகுறித்த விவரத்தினை வரும் 30ம் தேதிக்குள் இ-மெயில் மூலம் அனுப்ப வேணடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>