×

குடிநீர் இணைப்புக்கு ரூ.25 ஆயிரம் பெறுவதாக புகார் கோடீஸ்வரன் நகரில் உதவி இயக்குநர் விசாரணை

நெல்லை, செப். 25:  டவுன் கோடீஸ்வரன் நகரில் குடிநீர் இணைப்புக்கு ரூ.25 ஆயிரம் பணம் பெறுவதாக வந்த புகாரின் பேரில் உதவி இயக்குநர் (பஞ்.) அருணாசலம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது அப்பகுதி மக்கள் சரமாரியாக புகார்களை தெரிவித்தனர். நெல்லை டவுனை அடுத்து அமைந்துள்ளது கோடீஸ்வரன் நகர். இங்கு 1500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நகரின் ஒரு பகுதி நெல்லை மாநகராட்சியிலும், மற்றொரு பகுதி பேட்டை ரூரல் பஞ்சாயத்திற்கும் உட்பட்டது. நகரின் எல்லையை ஒட்டிய பகுதி என்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் துறை ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.

மாநகராட்சிக்குட்பட்ட தெருக்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. பஞ். பகுதி தெருக்களுக்கு ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து முறை வைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ரூரல் பஞ். கிளார்க் உதவியுடன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் சிலர் குடிநீர் இணைப்புகள் பெற்றுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே மானூர் யூனியன் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ரூரல் பஞ். பகுதியில் முறைகேடாக இணைப்பு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் இணைப்புக்கு ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் குடிநீர் இணைப்பு பெற கடும் போட்டி நிலவுவதால், பஞ். நிர்வாகம் முறைகேடாக ரூ.25 ஆயிரம் வரை வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனியாரிட்டி இன்றி ரூ.25 ஆயிரம் பணம் செலுத்துபவர்களுக்குத்தான் முதலில் குடிநீர் இணைப்பும் வழங்கப்படுகிறது. இதனால் அனைவராலும் குடிநீர் இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்தும் மானூர் யூனியனில் இப்பகுதி மக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து நெல்லை மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் அருணாசலம்  விசாரணை நடத்தி வருகிறார்.  நேற்று உதவி இயக்குநர், விசாரணைக்காக கோடீஸ்வரன் நகர் சென்ற போது சுமார் 100க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் திரண்டு வந்து குடிநீர் இணைப்பில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினர். தெருவிளக்குகள், பேவர்பிளாக் சாலை அமைத்தல், பிளான் அப்ரூவல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக புகார் தெரிவித்தனர்.அப்போது குடிநீர் இணைப்பு ரூ.1000க்கு வழங்கப்படும். பொதுமக்கள் அதிக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மற்ற புகார்கள் மீதும் உரிய விசாரணை நடத்தப்படுமென உதவி இயக்குநர்
உறுதியளித்துள்ளார்.

Tags : Assistant Director ,Rs ,
× RELATED பொதுப்பணித்துறை உதவி இயக்குநரிடம்...