கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகள் தீவிரம்

பண்ருட்டி, செப். 25:பண்ருட்டி பகுதியின் இரு புறமும் பெண்ணையாறு மற்றும் கெடிலம் என இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. இந்த இரு ஆறுகளை நம்பி சுமார் 1.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. காலப்போக்கில் ஆறுகளில் செல்லும் மழை நீரானது சேமிக்க முடியாமல் வீணாக கடலில் கலந்து வருகிறது. பலமுறை விவசாயிகள் இரண்டு ஆறுகளிலும் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட கோரி போராட்டங்கள் நடத்தி வந்தனர். மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும், எவ்வித பலனும் ஏற்படவில்லை. ஆறுகளில் தண்ணீரை சேமிக்க முடியாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

 500 அடிக்கு மேல் போர்வெல் அமைத்தால்தான் தண்ணீர் வரும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல், வாங்கிய கடனையும் கட்ட முடியாமல் அல்லாடி வந்தனர்.  இந்நிலையில் பண்ருட்டி மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் தடுப்பணைகள் கட்ட கோரி வலியுறுத்தி வந்தனர். இதன் விளைவாக பண்ருட்டி தொகுதியில் உள்ள பெண்ணையாற்றில் எனதிரிமங்கலம், கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம் ஆகிய பகுதியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.  இதேபோல் நெய்வேலி தொகுதியில் கெடிலம் ஆற்றில் பணிக்கன்குப்பத்தில் தடுப்பணை பணி கடந்த ஆண்டே முடிந்த நிலையில் தற்போது ரூ.15 கோடி மதிப்பில் எலந்தம்பட்டில் உள்ள கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி துவங்கி ஒரு மாதமாக நடந்து வருகிறது. தடுப்பணைகள் கட்டி முடித்து தண்ணீர் சேமித்தால் நீர் ஆதாரம் பெருகி விவசாயம் பெருகும் என அப்பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>