×

பணி நிரந்தரம் செய்ய 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

முஷ்ணம், செப். 25:   ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.  கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே வட்டத்தூர் ஊராட்சி செயலாளராக பழனிசாமி என்பவர் பணி செய்து வருகிறார். இப்பகுதியில் மணிகண்டன் என்பவர் டேங்க் ஆப்ரேட்டராக உள்ளார். இவரது தந்தை ரவிச்சந்திரன் டேங்க் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். அப்போது, அவர் இறந்த காரணத்தினால், அந்த பணியை மகனான மணிகண்டன் கடந்த 5 வருடமாக கவனித்து வந்தார். அப்போதைய நேரத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்தது. உள்ளாட்சி தலைவர்கள் இல்லாததால் ஊராட்சி செயலாளர்கள் மட்டும் கிராம பணிகளை கவனித்து வந்தனர்.  

 மணிகண்டனுக்கு மாத சம்பளமாக ரூ. 550 வழங்கப்பட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலரின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், மணிகண்டன் சம்பள உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இதேகோரிக்கையை ஊராட்சி செயலாளரிடம் மணிகண்டன் வலியுறுத்தினார்.  அப்போது, ஊராட்சி செயலர் பழனிசாமி உனக்கு கண்டிப்பாக பணிநிரந்தரம், ஊதிய உயர்வு வழங்குகிறேன். அதற்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என கூறியுள்ளார். பணத்தை மொத்தமாக தர முடியவில்லை என்றால் பரவாயில்லை. தவணை முறையில் கொடுத்தால் போதும் என கூறி சம்மதிக்க வைத்துள்ளார்.

மேலும் பணத்தை அலுவலகத்தில் வைத்து தரவேண்டாம். அப்பகுதியில் உள்ள  பள்ளி ஒன்றினை குறிப்பிட்டு அதன் அருகே வந்து தா எனவும் கூறியுள்ளார்.    இருந்தபோதும் அவரது பேச்சின் மீது நம்பிக்கை இல்லாததால் அப்போதைக்கு சரி தருகிறேன் என கூறி விட்டு மணிகண்டன் சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்து, கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மணிகண்டன் நேற்று மதியம் முதல் தவணையாக ரூ. 20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு பழனிசாமி கூறியபடி பள்ளி அருகே சென்றார். அப்போது, அங்கு நின்றிருந்த பழனிசாமியிடம் மணிகண்டன் பணத்தை கொடுத்துள்ளார். அதனை அவர் பெற்றுக்கொண்டார்.

 அப்போது, அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜாசிங் தலைமையிலான போலீசார் பழனிசாமியை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் கடலூர் அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags : police arrest panchayat secretary ,
× RELATED வேலூர் அருகே மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லஞ்சம் வாங்கியபோது கைது