10 வருட நட்பு முறிந்தது காரில் இருந்த ₹3லட்சம் திருட்டு நண்பர் உள்பட 2 பேர் கைது வேப்பூர் அருகே பரபரப்பு

வேப்பூர், செப். 25: விருத்தாசலம், பெரியார் நகர், என்எல்சி சாலையில் வசித்து வருபவர் சரவணன்(46). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது வியாபாரத்திற்காக சென்னையிலிருந்து வாகனத்தில் கொண்டு வரப்படும் சிகரெட் பாக்கெட்டுகளை வேப்பூர் அருகே மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 22ம் தேதி இரவு 11.35 மணியளவில் இவர் தனது நண்பரான விருத்தாசலம், அண்ணா நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் சிகரெட் கொள்முதல் செய்வதற்காக 3 லட்சம் ரூபாயுடன் காத்திருந்தார். தனக்கு சொந்தமான காரில் வேப்பூர் கூட்ரோடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை கார் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தி இருந்தார். பணத்தை காரின் முன் புறமுள்ள டேஸ்போர்ட்டில் வைத்து விட்டு சென்னையில் இருந்து சரக்கு வரும் வாகனத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர்.  

 இரவு நேரம் என்பதால் சரவணன், சீனிவாசன் ஆகிய இருவரும் காரினுள் தூங்கி விட்டனர். அதிகாலை 2 மணியளவில் சரவணன் எழுந்துள்ளார். டேஷ்போர்டில் வைத்திருந்த பணத்தை பார்த்தபோது, அங்கு பணம் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் சீனிவாசனை எழுப்பி பணத்தை காணவில்லை என கூறினார். இதையடுத்து, இருவரும் கார் முழுவதும் பணத்தை தேடி உள்ளனர். பணம் கிடைக்கவில்லை. காரின் முன்பக்க கண்ணாடி சிறிதளவு இறங்கி இருந்ததை பார்த்த சரவணனுக்கு சீனிவாசன் மீது சந்தேகம் ஏற்பட்டது.  

 மேலும் காரில் பணம் இருந்த இடம் சீனிவாசனுக்கு மட்டுமே தெரியும் என்பதால் சீனிவாசன் மீதான சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து, சரவணன் வேப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சரவணன் தூங்கி கொண்டிருந்தபோது, சீனிவாசன் காரில் இருந்து 3 லட்சம் ரூபாயை திருடி தனது நண்பரான விருத்தாசலம் விஎன்ஆர் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை வர வைத்து காரின் முன்பக்க கதவை சிறிது திறந்து பணத்தை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது.

இதையடுத்து பணத்தை திருடிய சேகர் மகன் சீனிவாசன்(29), அவரது நண்பர் கலியபிள்ளை மகன் சுரேஷ்குமார் (36) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  பின்னர் 3 லட்சம் ரூபாயை மீட்டு சரவணனிடம் ஒப்படைத்தனர். சரவணன் மற்றும் சீனிவாசன் இருவரும் 10 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>