×

கே.எஸ்.அழகிரி அக்.2ல் குமரி வருகை

நாகர்கோவில், செப்.25: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் வரும் அக்டோபர் 2ம் தேதி குமரி மாவட்டம் வருகை தர உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைவையொட்டி தொகுதி காலியாகி உள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வரும் அக்டோபர் 2ம் தேதி குமரி மாவட்டம் வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்று காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினம் என்பதால் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம் ஆகிய இடங்களில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து வசந்தகுமார் நினைவிடத்திற்கும் சென்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் குமரி மேற்கு மாவட்டத்தில் கருங்கலில் நடைபெறுகின்ற காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேச உள்ளார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் வருகை தர வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று (25ம் தேதி) காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மு.க.அழகிரி மற்றும் தினேஷ் குண்டுராவ் பயண திட்டம் இறுதி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

Tags : KS Alagiri ,Kumari ,
× RELATED வேளாண் சட்டங்களை கண்டித்து தடையை மீறி...