×

எம்.சாண்ட் லாரிகளை சிறைபிடித்த மக்கள்

கோவை, செப்.25:  கோவை திருமலையம்பாளையம், பாலத்துறை, நாச்சிபாளையம் வழியாக கேரள மாநிலத்திற்கு அனுமதியின்றி எம்.சாண்ட், ஜல்லி கற்கள், போல்டர் கற்கள் கொண்டு செல்வதாக புகார் வந்தது. இது ெதாடர்பாக கனிம வளத்துறையினர், வருவாய்த்துறை, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று திருமலையம்பாளையம் வழியாக வேலந்தாவளம் வழியாக கேரளா சென்ற டிப்பர் லாரிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்து சிறைவைத்தனர். எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பெரும்பாலானவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக திருமலையம்பாளையம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘எம்.சாண்ட், கிராவல் மண், ஜல்லி, போல்டர் கற்கள் எடுக்க கேரள மாநிலத்தில் கடும் கட்டுப்பாடு இருக்கிறது. கோவையில் இருந்து கனிம வளத்துறையின் அனுமதியின்றி கனிம பொருட்கள் கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. அங்கே அதிக விலைக்கு கனிம பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

வருவாய்த்துறையினரும், கனிம வளத்துறையினரும் இந்த லாரிகளை பிடிப்பது, அபராதம் விதிப்பது, பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. லாரிகளை செல்லவிட்டு வேடிக்கை பார்க்கும் நிலைதான் இருக்கிறது. கனிம பொருட்களை கடத்துபவர்களிடமிருந்து அதிகாரிகள் கமிஷன் வாங்குவதாக சந்தேகம் எழுந்துள்ளது. கிராமங்களில் லோடு லாரிகள் செல்வதால் பல இடங்கள் மேடு, பள்ளமாக மாறிவிட்டது. ரோடுகள் சேதமடைந்தும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம பகுதியில் கனரக வாகனங்கள் அதிகளவு செல்ல அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதைத்ெதாடர்ந்து லாரிகளை மடக்கி பிடித்துவிட்டோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கனிம பொருட்கள் கேரளாவிற்கு கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED முதுமக்கள் தாழி, எலும்புக்கூடுகள்...