புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும் காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படுமா?

கோவை, செப். 25: கோவை மேட்டுப்பாளையம் ரோடு புதிய பேருந்து நிலையத்திற்கு செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படுமா? என பயணிகள், பேருந்து ஓட்டுனர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  கோவை மாவட்டத்தில் கொரோனா பொது ஊரடங்கின்போது காந்திபுரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையங்கள் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாற்றப்பட்டது. இதில், மொத்த காய் கறி மார்க்கெட்டிற்காக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் காய்கறிகள் இறக்கப்படுகிறது.

தினமும், 400 மேற்பட்ட லாரிகள் வந்து செல்கிறது. மேலும், காய்கறிகள் அனைத்தும் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பாக்க வைக்கப்பட்டு வருகிறது. எனவே, வியாபாரிகளுக்கு ேபருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மார்க்கெட் மிகவும் பயனுள்ளதாக மாறிவிட்டது. தற்போது, ஊரடங்கு தளர்வை அடுத்து பயணிகளுக்காக குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த தற்காலிக மார்க்கெட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டது.

ஆனால், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால், ஊட்டி, குன்னூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்தின் முன்பு நிறுத்தப்படுகிறது. இதனை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இப்படி, காத்திருக்கும் பயணிகள் அமர கூட வசதியில்லாத நிலையுள்ளது. பல கோடி செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் தற்போது காய்கறி வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு இருந்து வருவது பேருந்து பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து ஓட்டுனர்களும், பேருந்தை வெளியில் நிறுத்துவதற்கு முடிவதில்லை. போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது என புகார் தெரிவித்துள்ளனர். காய்கறி வியாபாரிகளின் கையில் உள்ள பேருந்து நிலையம், மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என  பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் எதிர்பார்த்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: