மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி 28ல் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப்.25: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி சார்பில் 28 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களை திரும்பபெறக்கோரியும், மசோத நிறைவேற ஆதரவு அளித்த அ.தி.மு.க.வை கண்டித்தும் வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போராட்ட வியூகம் குறித்த தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.

தி.மு.க. மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார். ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை, சென்னிமலை, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் 28 இடங்களில் வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு தோழமை கட்சிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் சமூக இடைவெளியை பின்பற்றி போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரவி, மக்கள் ராஜன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முருகன், குழந்தைவேலு, கொ.ம.தே.க. மாநில நிர்வாகிகள் பாலு, சூரியமூர்த்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., தமிழ் புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>