×

வெளியூர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை எடுத்து செல்ல அனுமதி

ராமேஸ்வரம், ஆக.22: ராமேஸ்வரம் இந்து முன்னணி அமைப்பின் பாதுகாப்பில் இருந்த விநாயகர் சிலைகளை மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சில கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வெளியூர்களுக்கு கொண்டு செல்ல ராமேஸ்வரம் போலீசாரால் அனுமதி அளிக்கப்பட்டது.  தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட, ஊர்வலமாக எடுத்து செல்ல அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி அமைப்பின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வெளியூர் கொண்டு செல்ல மாவட்ட போலீஸ் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

 திறந்த வாகனத்தில் விநாயகர் சிலைகள் எடுத்து செல்லாமல் மூடிய வாகனத்தில் சிலைகளை எடுத்துச்செல்லவும், பொது இடத்தில் வைத்து வழிபடுவது, ஊர்வலமாக எடுத்துச்செல்வது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தமிழக அரசின் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவேன் என்று இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட நிர்வாகத்திற்கு எழுத்து பூர்வமான உறுதி அளித்தார். தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி அலுவலகம் அருகே அபய ஆஞ்சநேயர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 53 விநாயகர் சிலைகள் தனியார் இடத்தில் வைத்து வழிபடுவதற்காக வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.

இதையொட்டி நேற்று காலை ராமேஸ்வரம் போலீசாரின் அனுமதிக்குப்பின் திருவாடானை, தேவிப்பட்டினம், திருப்புல்லாணி, மண்டபம், பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் நகரில் பல்வேறு இடங்களுக்கும் விநாயகர் சிலைகள் இந்து முன்னணி அமைப்பினரால் கொண்டு செல்லப்பட்டது.

Tags : Foreigners ,Ganesha ,
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்