×

விக்டோரியா மகாராணிக்கு விசிறி செய்ய பயன்பட்டது அழிந்து வரும் அபூர்வ கூந்தல்பனை தமிழக அரசு பாதுகாக்குமா?

திருவாடானை, ஆக.22: திருவாடானையில் அழிந்துவரும் அபூர்வ கூந்தல் பனைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உலகில் தொன்மை வாய்ந்த மரங்களில் பனைமரங்களும் ஒன்றாகும். அதுவும் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவு பனை மரங்கள் உள்ளன. பனை மரங்களில் 34 வகைகள் இருப்பதாக அறியப்படுகிறது. அதிலும் கூந்தல் பனை என்ற அரிய வகை பனை தமிழகத்தில் சில இடங்களில் உள்ளன. இந்த பனைகள் 70 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும்.

அதன்பின் அழிந்துவிடும். 70 வயதில் அபூர்வ வகையில் பூப்பூக்கும். பின்னர் காய்க்க  தொடங்கியதும் சில மாதங்களிலேயே பட்டு போய்விடும்  இந்த பனைமரம் தாலிப்பனை, கூந்தல் பனை, குடை பனை, தேர் பனை என பல பெயர்களில் பல இடங்களில் அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் இதனை தொப்பி செய்யவும் விசிறி செய்யவும் பயன்படுத்தி உள்ளனர். விக்டோரியா மகாராணிக்கு விசிறி செய்ய இங்கிருந்து கூந்தல் பனை ஓலையில் தயாரித்து அனுப்பி உள்ளனர்.
 சங்ககாலத்தில் திருமணத்தின்போது கணவரின் குல சின்னங்களை இந்த கூந்தல் பனை ஓலையில் எழுதி கழுத்தில் தாலியாக அணிந்துள்ளனர். அப்போது பனையோலையில் மட்டுமே தாலி அணியும் பழக்கம் இருந்துள்ளது. சங்ககாலத்தில் மாட்டு வண்டிக்கு மேற்கூரையாக இந்தக் கூந்தப்பனை ஓலைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

 இப்படி பல்வேறு வகையில் சங்ககாலம் முதல் இருந்து வந்த மிகப்பழமையான இந்த அரியவகை மரம் தற்போது அழிந்து வருகிறது. இந்த வகை மரங்களை யாரும் விதை போட்டு வளர்ப்பதில்லை. தானாகவே முளைக்கிறது. இதன் அருமை தெரியாமல் பல ஊர்களில் வெட்டி வீசி விடுகின்றனர். இந்த மரத்தின் காய் மருத்துவத்திற்கு பயன்பட்டு வந்துள்ளது. இப்படி அபூர்வமான இந்த கூந்தல் பனை மரங்களை அரசு கணக்கெடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Victoria ,Government of Tamil Nadu ,
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் அசரெங்கா