×

மதுரை அரசு மருத்துவமனை ஏட்டுக்கு கொரோனா

மதுரை, ஆக.22: மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா மருத்துவமனைக்கு வரும் மற்றும் மருத்துவமனையிலிருந்து வெளியே செல்பவர்களிடம் விசாரணை நடத்தி அனுமதி வழங்குவது உள்ளிட்ட பணிகளை இந்த செக்போஸ்ட்டில் உள்ள போலீசார் மேற்கொண்டு வந்தனர். இந்த செக்போஸ்ட் பணிக்கு, மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்திலிருந்து சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்படுகின்றனர்.  இந்நிலையில் சில தினங்கள் முன்பு இந்த ேபாலீஸ் செக்போஸ்ட்டில் பணியாற்றி வந்த எஸ்ஐ ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி, இதே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

  இந்நிலையில் மருத்துவமனை காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் 40 வயது மதிக்கத்தக்க முதுநிலை காவலர் ஒருவருக்கு தற்போது, கொரோனா உறுதியாகி உள்ளது. காவல் நிலையத்தில் தொற்று தொடர்ந்து பரவுவது, மற்ற காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ``கொரோனா பரவும் சூழலில், தினமும் `ரோல்கால்’ நடத்தப்படுகிறது. இதனால் மேலும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, போலீசார் நலன் கருதி, மருத்துவக்கல்லூரி மைதானத்தில் ரோல்காலை நடத்தலாம். அல்லது ரோல்கால் நடத்துவதை சில காலம் தள்ளிப்போடலாம்’’ என்றனர்.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...