பெரியாறு பாசனநீர் திறக்க உள்ள நிலையில் பாதியிலேயே நிற்கும் கால்வாய் சீரமைப்பு விவசாயிகள் கவலை

வாடிப்பட்டி, ஆக. 22:   வாடிப்பட்டி அருகே பாசன வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட புதிய கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிற்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நீரேத்தான் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாய பணிகள் நடைபெறுவது வழக்கம். முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் பாசனவசதி பெற்று வரும் இப்பகுதியில் ரெங்கசமுத்திரம் என்ற இடத்திலிருந்து பிரியும் கிளை கால்வாய் மூலம் சுமார் 480 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பணிகள் நடைபெறும்.

சுமார் 4 கி.மீ தூரம் பயணிக்கும் இக்கால்வாய் சிதிலமடைந்த நிலையில் கிடந்ததால், பொதுப்பணித்துறையின் மூலம் அண்மையில் கால்வாயை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கட்டுமானப்  பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக விவசாயிகள் புகார் கூறி  வந்தனர். இந்த நிலையில் கால்வாய் கட்டுமானப் பணிகளும் மூன்றுமடை தேக்கம் என்ற இடம் வரை வந்த நிலையில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால் கால்வாயின் பெரும்பாலான பகுதிகள் கால்வாய் இல்லாமல் வெறும் புதராகவே  காட்சியளிக்கின்றன. இன்னும் ஒரு சில தினங்களில் முல்லைப் பெரியாற்று கால்வாயில் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட உள்ள நிலையில் இப்படி கால்வாய் கட்டுமான பணிகள் பாதியில் நிற்பது விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுவரை பணிகள் முடிந்துள்ள கால்வாயினால் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு மட்டுமே பாசன வசதி பெற முடியும் என்றும், அரை குறை பணிகளால் சுமார் 280 ஏக்கர் பரப்பளவு நிலங்களுக்கு நீர் செல்வதே கேள்விக்குறியாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் காவல்துறை அதிகாரியும், விவசாயியுமான ஜெகத்ரட்சகன் கூறுகையில்,`` முதல்போக நெல்சாகுபடி பணிகள்  துவங்கவுள்ள நிலையில் பொதுப்பணி துறையினர் முறையாக பாசனநீர் செல்லும் பிராதான கால்வாய் மற்றும் கிளைக் கால்வாய் பகுதிகளை  சீரமைக்காமல் மெத்தனமாக உள்ளனர். தமிழக அரசு விவசாயிகளின் நலன்கருதி கால்வாய் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்பே பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories: