9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆக.28ல் ஆர்ப்பாட்டம்

பழநி, ஆக. 22: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கொரோனா நோய் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் மூலமாக வழங்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், இசேவை மையங்கள் மூலமாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை போக்கிட வேண்டும். அனைத்து இசேவை மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வேண்டும்.

அரசு இசேவை மட்டுமின்றி அனைத்து இசேவை மையங்களிலும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்கிட வேண்டும்.  5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம்களை உடனடியாக மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும். செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைப்படும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அளவீட்டு முகாம் நடத்தி உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.

மனநிலை பாதிக்கப்பட்டு தெருவில் திரியும் மாற்றுத்திறனாளிகளை முகாம்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ம் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பழநி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி, சத்திரப்பட்டி, ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, அய்யலூர், நிலக்கோட்டை, செம்பட்டி, சாணார்பட்டி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளதாக சங்கத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: