×

பழநியில் ‘விதை’ விநாயகர் சிலை விநியோகம்

பழநி, ஆக. 22: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தி, பின் நீர்நிலைகளில் கொண்டு சென்று கரைக்கப்படும். இந்த ஆண்டு கொரோனாவின் காரணமாக தமிழக அரசு பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய தடை விதித்துள்ளது. தமிழக அரசின் தடையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில், வீடுகளிலேயே சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி பழநியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து சக்தி சங்கமம் அமைப்பின் சார்பில் 108 விதை விநாயகர்கள் பொதுமக்களுக்கு நேற்று இலவசமாக வழங்கப்பட்டன. ஆலமரம், அரசமரம், வேப்பமரம் உட்பட 9 வகையான மரங்களின் விதைகள் கொண்ட சிலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.  இதுகுறித்து அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் கூறியதாவது, ‘விநாயகர் சிலைகளின் மீது தண்ணீர் ஊற்றி வரும்போது விதை முளைக்க ஆரம்பிக்கும். பின்னர், அதனை வீட்டின் வெளியே நட்டு வைப்பதன் மூலம் மரமாக வளர்ந்து பயனளிக்கும். மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதற்காக இம்முயற்சியில் இறங்கினோம்’ என்றார்.

Tags : Ganesha ,Palani ,
× RELATED பழநி பங்குனி உத்திரத் திருவிழா அன்னதான மையங்களில் ஆய்வு