×

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது

பொள்ளாச்சி, ஆக. 22: பொள்ளாச்சி அருகே, மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய விவசாயிடம் ரூ.2 ஆயிரம் லட்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.   உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரை சேர்ந்தவர் அமர்நாத், விவசாயி. இவர் பண்ணைகிணறு பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 4 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். மின் இணைப்பு பெயர்  மாற்றுவதற்காக பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் அந்த விவசாயிடம், மின்வாரிய கணக்கெடுப்பு மேற்பார்வையாளர் கிறிஸ்டோபர் மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். முன்பணமாக ரூ.500 வாங்கியதாக கூறப்படுகிறது. மீதி பணத்தை விரைந்து அளிக்க கிறிஸ்டோபர் கேட்டுள்ளார். இது குறித்து அமர்நாத், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார், ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டை அமர்நாத்திடம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அமர்நாத் லஞ்ச பணத்தை மின்வாரிய அலுவலகத்தில் இருந்த கிறிஸ்டோபரிடம் நேற்று கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விவசாயிடம் இருந்து பணத்தை வாங்கிய கிறிஸ்டோபரை கையும் களவுமாக பிடித்தனர். பின் அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு, மின்வாரிய ஊழியர் கிறிஸ்டோபரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

Tags : Electricity employee ,
× RELATED மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக்...