×

முதுமலை புலிகள் காப்பகத்தில் 3வது கட்டமாக 168 குடும்பங்களை இடமாற்றும் பணி விரைவில் துவக்கம்

ஊட்டி,ஆக.22: முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மூன்றாவது கட்டமாக 168 குடும்பங்களை இடமாற்றம் செய்வதற்கான பணி விரைவில் துவக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு சரணாலயம் கடந்த 2007ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதனால் முதுமலை பாதுகாப்பு பகுதியாக மாறியது. கடந்த 2018ம் ஆண்டு 688 சதுர கி.மீ., அளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. புலிகள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல பகுதியில் வசிக்க கூடிய பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத மக்களை இடமாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது. கோல்டன் ஹேண்ட் ஷேக் என பெயரிடப்பட்ட மறு குடியமர்வு திட்டத்தின் கீழ் வனத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்படும் ஒரு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

நிவாரண தொகை வேண்டாம் என்பவர்களுக்காக அய்யன்கொல்லி பகுதியில் மாற்றிடமும் ஏற்பாடு செய்யப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பென்னை,நெல்லிக்கரை,நாகம்பள்ளி,மண்டக்கரை,புலியம்பாளையம், முதுகுழி, குடித்தகன் ஆகிய 7 கிராமங்கள் உள்ளன. மறு குடியமர்வு திட்டத்தின் கீழ் இக்கிராமங்களை சேர்ந்த 658 குடும்பங்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூன்று கட்டமாக இதற்கான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதனிடையே முதல் இரு கட்டமாக இடமாற்றம் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது. மூன்றாவது கட்டமாக 168 குடும்பங்களை இடமாற்றம் செய்வதற்கான பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசுகையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ள படி முதற்கட்டமாக 235 குடும்பங்களும், 2ம் கட்டமாக 255 குடும்பங்களுக்கும் பண பலன்கள் வழங்கப்பட்டு குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மூன்றாவது கட்டமாக 168 குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்பு பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது.  மாற்றிடத்தில் குடியேறும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

தொடர்ந்து ஸ்ரீமதுரை ஊராட்சி ஓடங்கொல்லி கிராமத்தை சேர்ந்த மரத்தில் இருந்து விழுந்து முதுகெலும்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுந்தர் என்பவருக்கு கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. கூட்டத்தில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாஸ் ரெட்டி, துணை இயக்குநர் செண்பகபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : families ,phase ,Mudumalai Tiger Reserve ,
× RELATED முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்