இன்று விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் சிலை வைத்தால் நடவடிக்கை

கோவை, ஆக. 22:  விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும்.

பின்னர் விநாயகர் சிலைகள் ஆட்டம், பாட்டத்துடன் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவற்கும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்து அமைப்புகள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இந்து அமைப்புகள் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அதேபோல், இந்த ஆண்டு விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், கடை வீதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொள்கின்றனர். இதேபோல் கோவை புறநகர் பகுதிகளில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், பொது அமைதியை காக்கும் வகையிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விதிமுறைகள் மற்றும் தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதற்கிடையே வீடுகளில் வைக்கப்படும் சிறிய அளவிலான சிலைகளை கரைப்பதற்கு வசதியாக குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளக்கரைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: