தனியார் பள்ளி மாணவர்கள் வருகையால் கோவை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

கோவை, ஆக. 22:  கொரோ னா காரணமாக தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்களின் பெற்றோர் அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருவதால் கோவை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 3 நாளில் 11,378 பேருக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாக  முதன்மை கல்வி அதிகாரி உஷா தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த 17ம் தேதி முதல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட அனைத்து வகையான பள்ளிகளிலும் 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கை துவங்கி  நடந்து வருகிறது. அதன்படி கோவையில் ராஜவீதி துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, நியூ சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 1,100-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் மற்றும் துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

மாணவர் சேர்க்கையின்போது அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்டவைகள் பின்பற்றப்படுகிறது. அத்துடன் சேர்க்கையின்போது மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம், நோட்டு புத்தகத்தை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் ஆங்கில வழி சேர்க்கைக்கு மவுசு அதிகரித்துள்ளது.

முதன்மை கல்வி அதிகாரி உஷா கூறியதாவது: கோவையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு பள்ளிகளில் கடந்த 17ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான மூன்று  நாட்களில் 11 ஆயிரத்து 378 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,356 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: