×

தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி ரூ.750 வழங்க கோரிக்கை

ஈரோடு, ஆக.22: தினக்கூலி பணியாளர்களுக்கு நடப்பாண்டிற்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.750 ஆக விரைவில் நிர்ணயித்து வழங்க வேண்டும் என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஏஐடியுசி ஈரோடு மாவட்ட தலைவர் சின்னசாமி, கலெக்டர் கதிரவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டிரைவர், மேசன், வாட்ச்மேன், மஸ்தூர், கார்டனர், கார்பெண்டர் போன்ற 30க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் குறைந்தபட்ச கூலி நிர்ணயித்து, அதனடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்.1ம் தேதி முதல் அமலாக்கப்பட வேண்டிய, நடப்பாண்டிற்கான ஊதிய நிர்ணயம் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊதிய இழப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
எனவே, நடப்பு ஆண்டுக்கான மாவட்ட குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக நிர்ணயித்து அறிவிப்பதுடன் அதனை முன் தேதியிட்டு அமலாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலை உயர்வால் வாழ்க்கை செலவினங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.750க்கு குறையாமல் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : day laborers ,
× RELATED ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக நிரந்தரமாக தடை செய்க: ஜி.கே.வாசன் வேண்டுகோள்