×

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடைபாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

ஈரோடு, ஆக.22: பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாக, பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு பின்னர் ஊர்வலகமாக சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு செல்லும் என கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, தடையை மீறி பாஜ மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொது இடங்களில் சிலைகள் வைக்கப்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக எஸ்.பி.தங்கதுரை கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அரசின் உத்தரவுப்படி பொது இடங்களில் இந்தாண்டு விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 2 ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையில், 8 டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என மொத்தம் 1200 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், 372 போலீசார் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரோந்து பணியில் தனியாக போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலைமையை சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு டி.எஸ்.பி. தலைமையில் 10 பேர் கொண்ட ஸ்டிரைக்கிங் போர்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கவுந்தப்பாடியில் விநாயகர் சிலை வைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு தங்கதுரை கூறினார்.

Tags : policemen ,places ,Ganesha ,
× RELATED கள்ளக்காதலியுடன் லாட்ஜில் உல்லாசம்...