×

விவசாயிகள் செப்.15க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்

ஈரோடு, ஆக.22: ஈரோடு மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர அடுத்த மாதம் 15ம் தேதி கடைசிநாள் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்துறை இணை இயக்குநர் சின்னசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பயிர் காப்பீடு திட்டம் மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் மூலம், பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. நடப்பு காரீப் பருவத்துக்கு வேளாண் பயிர்களில், மக்காச்சோளம், துவரை, உளுந்து, நிலக்கடலை, வருவாய் கிராம அளவில் ராகி, எள் பயிர்கள் பிர்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. பிர்கா விபரங்களை, வேளாண் துறையில் விவசாயிகள் நேரடியாக அறிந்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள், நடப்பாண்டுக்கான அடங்கல், விதைப்பு சான்றை வி.ஏ.ஓ.,விடம் பெற்று, அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் இணைத்து, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கி, பொது சேவை மையங்களில் பதிவு செய்யலாம்.

வேளாண் பயிர்களில், மக்காச்சோளம் ஏக்கருக்கு, ரூ.586, துவரை, உளுந்து பயிர் ஏக்கருக்கு, ரூ.331, நிலக்கடலை பயிர் ஏக்கருக்கு, ரூ.591, ராகி மற்றும் எள் பயிர் ஏக்கருக்கு, ரூ.262 காப்பீடு கட்டணமாகும். அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பயிற்சி காப்பீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை