தொழில் துவங்க கடன் வழங்காததால் வங்கியை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

கோபி, ஆக.22: கோபி அருகே மாற்றுத்திறனாளிகள் வங்கியை முற்றுகை நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபி அருகே உள்ள அளுக்குளியில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குழுவாக இணைந்து சுய தொழில் தொடங்க அளுக்குளியில் உள்ள ஒரு வங்கி கிளையில் விண்ணப்பித்தனர்.  விண்ணப்பித்து 45 நாட்கள் கடந்த நிலையில் பலமுறை மாற்றுத்திறனாளிகள் வங்கி கிளையை அணுகியும் கடன் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நேற்று வங்கி கிளையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது: கொரோனா பரவலால் வாழ்வாதாரம் முற்றிலும் இழந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் குழுவாக இணைந்து வங்கி கடன் பெற்று தொழில் தொடங்குமாறு கூறியது. அதன்படி, கடந்த 45 நாட்களுக்கு முன் அளுக்குளி வங்கி கிளையில் விண்ணப்பம் செய்தோம்.  தற்போது வரை வங்கி கடன் வழங்கவில்லை. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டாலும் உரிய பதில் கூறுவதில்லை. இவர்கள் கடன் வழங்க முடியாது என்று முதலிலேயே கூறி இருந்தால் வேறு வங்கியில் கடன் பெற்று இருப்போம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>