×

வெளிமாநில பூக்களுக்கு தடை கேரள முதல்வர் மறுபரிசீலனை செய்து ஓணத்துக்கு மலர் கொள்முதல் செய்ய வேண்டும்

சத்தியமங்கலம், ஆக.22: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சம்பங்கி, செண்டுமல்லி, முல்லை உள்ளிட்ட பல்வேறு வகை மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு இங்கு பறிக்கப்படும் பூக்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மலர் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ள நிலையில் தற்போது பூக்கள் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதால் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.  

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து பூக்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். தற்போது, கொரோனா அச்சுறுத்தலால் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது தொடர்பான மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் வெளிமாநிலங்களிலிருந்து ஓணம் பண்டிகைக்கு பூக்களை கொள்முதல் செய்வதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உள்ளூரிலேயே கிடைக்கும் மலர்களை பயன்படுத்தி பண்டிகை கொண்டாடுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து மலையாள நாளிதழ்களிலும் செய்தி வெளியாகி உள்ளன. இந்த தகவல் அறிந்த சத்தியமங்கலம் பகுதி மலர் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இதுகுறித்து சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது: பூக்களால் மட்டுமே கொரானா பரவும் என்பது தவறான கருத்து. இதனால், தமிழகத்தில் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கேரள மாநிலத்துக்கு காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் நிலையில் பூக்களை ஓணம் பண்டிகைக்காக கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்ல அம்மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும்.  ஓணம் பண்டிகைக்கு மலர்கள் வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்வதை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளதை கேரள முதல்வர்  மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : Chief Minister ,Kerala ,Onam ,
× RELATED முதல்வர் தூத்துக்குடி சுற்றுப்பயணம் ரத்து