ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும்

அந்தியூர், ஆக.22: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும் என அமைச்சர் கருப்பணன் நம்பிக்கை தெரிவித்தார்.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த  ஒலகடம், பட்லூர் உள்ளிட்ட  பகுதிகளில் பல்வேறு நலத்தத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.1000 கோடி  நிதி ஒதுக்கப்பட்டு இதுவரை ரூ.225 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.775 கோடியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

பயிர்க்கடன் மட்டுமன்றி கால்நடைகளுக்கும் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் பாசன கால்வாய், தடப்பள்ளி அரக்கன்கோட்டை, கீழ்பவானி பாசன கால்வாய் என அனைத்து பாசன பகுதிகளுக்கும் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  நீர் நிலைகளில் ஆலை கழிவுகளையோ, சாயக்கழிவுகளையோ கொட்டினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுகளை கொட்டும் ஆலையும் மூடப்படும். தமிழகத்தில் நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டுவது 90 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கு கிடைத்த 100 சதவிகித வெற்றி. தற்போது வேதாந்தா நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதிலும், தமிழகத்துக்கு ஆதரவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கும். இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார்.

Related Stories: