×

முறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு

செய்யூர், மார்ச் 20: காலி குடங்களுடன் அரசு பஸ்சை சிறைப்பிடித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுராந்தகம் ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால், அதனை முறையாக பராமரிப்பது இல்லை. தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் பம்ப் ஆபரேட்டர் வயதானவர் என்பதால், அவரும் தொட்டியில் ஏறி சுத்தம் செய்வது இல்லை. இதனால், அதில் ஏற்றப்படும் தண்ணீர் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இதற்கிடையில், தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின் மோட்டார் அடிக்கடி பழுதாகிவிடுகிறது. இதனால், பல நாட்களில் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள், காலி குடங்களுடன் பல இடங்களுக்கு அலைந்து திரிகின்றனர். இதைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதானது. இதனை ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதனால், பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், குடிநீர் தொட்டியை முறையாக சுத்தம் செய்யாத பம்ப் ஆபரேட்டர் மற்றும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்காத ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து, நேற்று காலை 9 மணியளவில் தச்சூர் - படாளம் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் திரண்டனர். அப்போது அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து செய்யூர் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்...