×

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு

பெரும்புதூர், மார்ச் 20: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 2 பேரை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரும்புதூர் அருகே எருமையூர், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பரத் (21). பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. இதனால் பரத், போலீசாரிடம் சிக்காமல், கடந்த சில மாதங்களாக தலைமறைவாக சுற்றி திரிந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் பரத், அவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத 6 பேர், கத்தி, வீச்சரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் வந்து வீட்டின் கதவை உடைத்துள்ளனர். சுதாரித்து கொண்ட பரத் வீட்டின் ஸ்லாப் மீது ஏறி மறைந்து கொண்டார்.

இதையடுத்து மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடி, கதவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சிதறின. இதில் நாட்டு வெடிகுண்டு துகள்கள் சிதறியதில் பரத், முகம் மற்றும் மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. புகாரின்படி மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் சௌந்தரராஜன் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து, பிரபல ரவுடிகளான பழந்தண்டலம், பெரியார் தெருவை சேர்ந்த கர்ணா (எ) சின்ன கர்ணன் (32), கருணாகரன் (எ) பெரிய கருணா (38) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீது, பல காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி, ஆள்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இருவரையும் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ய வேண்டும் என எஸ்பி சாமுண்டீஸ்வரி, கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags : Gundas ,
× RELATED பிரபல ரவுடி கொலை வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்