×

உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், மார்ச் 20: செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் உள்ள தனியார் உப்பள தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்காததால் வறுமையில் வாடுகின்றனர். உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் செல்வம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் செல்வம் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேட்டில் இயங்கும் பத்மா கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உப்பள தொழிலாளர்களாக 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு முறையான குறைந்தபட்ச ஊதியம் வழங்கவில்லை.
இதனால் பல ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் வேலைசெய்து வரும் தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். இதனால், அவர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தியும் பத்மா கெமிக்கல் நிறுவனம் செவிசாய்க்காமல் தொழிலாளர்களை அலட்சியப்படுத்தி வருகிறது. எனவே, மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்தி உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

Tags : salt workers ,Kanchi ,
× RELATED கடம்பத்தூரில் மந்தகதியில் நடக்கும்...