×

புழல் சுற்றுவட்டார சாலைகளில் பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

புழல், மார்ச் 20: புழல் ஜிஎன்டி சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் பழுதடைந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி பழுதடைந்த போக்குவரத்து சிக்னலை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புழல் ஜிஎன்டி சாலையில் கதிர்வேடு சந்திப்பு, புழல்-அம்பத்தூர் சாலை சந்திப்பு, மத்திய சிறைச்சாலை, காவாங்கரை, சாமியார் மடம், செங்குன்றம்-வடகரை சந்திப்பு, செங்குன்றம்-சோத்துப்பாக்கம் சாலை சந்திப்பு, திருவள்ளூர் கூட்டு சாலை, பாடியநல்லூர் என அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சிக்னல்கள் இயங்குவதில்லை.

இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களும் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வரும் சாலை மார்க்கத்திலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதசாரிகளும் வாகனங்களில் அடிபட்டு படுகாயம் அடைகின்றனர். உயிரிப்புகளும் நடைபெறுகிறது. குறிப்பாக புழல்-அம்பத்தூர் சாலை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் உடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டி வருவதாகவும், போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அப்பகுதி வாகன ஓட்டிகள் சரமாரி புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘புழல் பகுதியில் இருந்து துவங்கும் ஜிஎன்டி சாலையின் இருபக்கத்திலும் உள்ள பெரும்பாலான போக்குவரத்து செக்னல்கள் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, விபத்துகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. எனவே செயல்படாமல் கிடக்கும் சிக்னல்களை சீரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : roads ,Accident drivers ,
× RELATED செங்கல்பட்டில் வெறிச்சோடிய சாலைகள்