×

ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது: 6 சவரன் நகை பறிமுதல்

ஆவடி, மார்ச் 20: ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மாஜி போலீஸ்காரரை போலீசார் கைது செய்தனர். ஆவடி பகுதியான புதிய ராணுவ சாலை, காமராஜர் நகர், திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பு, வைஷ்ணவி நகர் ஆகிய பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் பைக்கில் வந்து தங்க சங்கிலி பறிப்பது தொடர்கதையாக நடந்து வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆவடி, திருமுல்லைவாயல் காவல் நிலையங்களில் புகார் செய்தனர். இதனையடுத்து ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. மேலும், போலீசார் செயின் பறிப்பு நடந்த இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது மேற்கண்ட நான்கு இடங்களிலும் ஒரே வாலிபர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரது உருவத்தை வைத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், வழிப்பறி செய்த வாலிபர் ஆவடி, நந்தவன மேட்டூர், வ.உ.சி தெருவை சேர்ந்த சதீஷ் (32) என்பவர் என தெரிந்தது. எனவே நேற்று சதீஷை போலீசார் பிடித்து ஆவடி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, அவர் செயின் பறித்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சதீஷ் 2013 இளைஞர் காவல் படையில் சேர்ந்துள்ளார். பின்னர் 2016ம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆவடியில் உள்ள 3ம் அணியில் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது அவர், திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் வசித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம், அதே குடியிப்பில் வசிக்கும் சக காவலர் கோவிந்தராஜ் என்பவரிடம் கடனுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது  மனைவி கோமளா (21) சதீஷீக்கு பணம் கொடுக்க கூடாது எனக் கூறியுள்ளார்.

இதனை கோவிந்தராஜ், சதீஷிடம் கூறியதால் ஆத்திரம் அடைந்த சதீஷ், கோமளாவை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். இதுதொடர்பாக திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னர், சதீஷ் காவல் துறை பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர் அவர் ஆவடி, திருமுல்லைவாயில் பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார் என தெரிந்தது. இதையடுத்து சதீஷ் கொடுத்த தகவலின் பேரில் 6 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், சதீஷை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : robbery ,
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...