×

சுத்தியால் அடித்து நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

பூந்தமல்லி, மார்ச் 20: சென்னை ஆவடி, ஜே.பி. எஸ்டேட், 2வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் எழில் முருகன் (32). இவரது நண்பர் ஆவடி, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த தாமோதரன் (என்ற) கபாலி (34). கடந்த 2015ம் ஆண்டு எழில்முருகன் அழைத்து வந்த விபச்சார அழகியிடம் தாமோதரன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. பின்னர் அவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டதால், டாக்டரிடம் பரிசோதித்தபோது பால்வினை நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து தாமோதரன் செல்லும்போதெல்லாம் எழில்முருகன் தனது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, ‘தாமோதரன் தன்னை குறித்து தான் பேசுகிறார்’ என நினைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த தாமோதரன், எழில் முருகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி கடந்த 15.6.2015ம் ஆண்டு எழில்முருகன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு சென்ற தாமோதரன் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து எழில்முருகனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் எழில்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல்  நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் தாமோதரன் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தாமோதரனுக்கு ஆயுள் தண்டனையும், ₹3 ஆயிரம் அபராதம், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கருணாகரன் ஆஜராகி வாதாடினார்.

Tags :
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...