×

பெரம்பூர் கிராம பஸ் நிறுத்தத்தில் கல்வெட்டுகளால் பயணிகளுக்கு இடையூறு: உடனே அகற்ற கோரிக்கை

ஊத்துக்கோட்டை, மார்ச் 20: பயணியர் நிழற்குடை முன்பு மண்டிக்கிடக்கும் புதர்கள் மற்றும் அரசியல் கட்சி கல்வெட்டுகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் பெரம்பூர், பள்ள கண்டிகை, மேட்டுகண்டிகை, சென்னங்காரணை, காவனூர் என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு சென்னை - திருப்பதி சாலையில் உள்ள பெரம்பூர் பஸ் நிறுத்தத்தில் நின்று அங்கிருந்து பஸ் ஏறி செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்வதற்கு நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பெரம்பூர் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2017 - 2018ம் ஆண்டு ₹3.5 லட்சம் செலவில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது.இந்நிலையில் பெரம்பூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் இங்கு சிகிச்சை பெற சுற்றுப்புறத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெண்கள் பிரசவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வருவார்கள். இவ்வாறு வரும் பெண்கள் இங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் பஸ் நிறுத்தம் சென்று மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்வார்கள்.
தற்போது பெரம்பூர் பஸ் நிலையத்தில் நிற்கும் போது அங்கு புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை கண்டு பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தீண்டிவிடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் இதன் முன்பு உள்ள புதர்களையும், இடையூறாக உள்ள கட்சிகளின் கல்வெட்டுகளையும் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Travelers ,village bus stop ,Perambur ,
× RELATED நீடாமங்கலம் - மன்னார்குடி இடையே ரயில்...