சீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு

சென்னை, மார்ச் 20: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி பலர் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு அரசு உத்தரவை மீறி திறக்கப்படும் கடைகளை மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் 10 மாடி கொண்ட பிரபல துணிக்கடை ஒன்று அரசு உத்தரவை மீறி கடந்த 17ம் தேதி திறக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்றது.தகவலறிந்து வந்த சென்னை மாநகராட்சி 58வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன், சம்பந்தப்பட்ட கடை மேலாளரிடம் அரசு உத்தரவுப்படி கடையை மூடும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து, கடையை மேலாளர் குருநாதன் மூடியுள்ளார். ஆனால், சுகாதார ஆய்வாளர் சென்ற பிறகு, மீண்டும் கடையை திறந்து வியாபாரம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் மீண்டும் கடைக்கு வந்து, மேலாளர் குருநாதனை கண்டித்து, கடையை மூடும்படி உத்தரவிட்டுள்ளார். அதற்கு அவர், கடையை மூட முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால், சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் தலைைமயில் சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன், எஸ்ஓ வாசுதேவன் ஆகிய 5 அதிகாரிகள் கடையில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றி, கடையை மூடி சீல் ைவத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் 11 மணிக்கு துணிக்கடை வளாகத்தில் உள்ள சிறிய கடைகளை திறந்து வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன், அதிகாரிகளுடன் நேரில் சென்று கடையின் மேலாளர் குருநாதனிடம், ‘‘அரசு உத்தரவை மீறி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுகின்றீர்கள். இது சரியல்ல. உடனே, கடைகளை மூடுங்கள்,’’ என தெரிவித்துள்ளார்.  அதற்கு அவர் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, அவதூறாக பேசியதுடன், மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் வேப்பேரி காவல்நிலையத்தில், துணிக்கடை மேலாளர் குருநாதன் மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், குருநாதன் மீது ஐபிசி 294(பி), 341, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>