×

மெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 20: மெரினா லூப் சாலை - பெசன்ட் நகரை இணைக்கும் சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
  ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ரூ.27.04 கோடி ரூபாய் செலவில் 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ரூ.66 லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், லூப் சாலையில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் வழியில் இருந்த பாலம் கடந்த 1970ம் ஆண்டில் ஏற்பட்ட புயல் பாதிப்பால் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, இந்த மெரினா லூப்சாலை - பெசன்ட்நகர் சாலையை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ரூ.27.04 கோடி செலவில் அமைத்து கொடுக்க உள்ள 900 தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் வரும் ஏப்ரல் 2ம் தேதி நடைபெற உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்னர் 6 மாதங்களில் கடைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

 புயலில் சேதமடைந்த பட்டினம்பாக்கம் - பெசன்ட் நகரை இணைக்கும் சாலையை மீண்டும் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ள போதிலும் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. இந்த சாலையை இருவழி சாலையாக அமைக்க முடிவு ெசய்யப்பட்டுள்ளது. சாலையில் நடைபாதை மற்றும் சைக்கிளில் செல்பவர்களுக்காக 2.5 மீட்டர் அகலத்தில் தனி வழியும் அமைக்கப்படவுள்ளது.mஇந்த சாலையை அமைப்பது தொடர்பாக லேன்ட் டெக் இன்ஜினியர் என்ற தனியார் நிறுவனத்திடம் ஆய்வு அறிக்கையை கேட்டுள்ளோம். அந்த ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு கால அவகாசம் தேவை என்றார். இதைகேட்ட நீதிபதிகள், இந்த சாலையை மீண்டும் அமைப்பது தொடர்பான ஆய்வு அறிக்கையை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், மெரினாவில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான அறிக்கையை வரும் 24ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : road ,Marina Loop Road ,Besantnagar ,
× RELATED தாமதமாகும் தடுப்புக்கட்டை பணிகள்...