நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, மார்ச் 20: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் ஒரு ஆட்கொணர்வு மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது, அந்த இன்ஸ்பெக்டர் சார்பில் பெண் போலீஸ் பூம்பாவை ஆஜரானார். அவரிடம் இன்ஸ்பெக்டர் எங்கே என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு சென்றதாக தெரிவித்தார். உடனே நீதிபதிகள் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு இன்ஸ்பெக்டர் போனாரா என்பது குறித்து விளக்கம் தர உத்தரவிட்டனர்.

Advertising
Advertising

இதையடுத்து, அந்த இன்ஸ்பெக்டர் ஆஜராகி, தான் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அரசு வக்கீல் அலுவலகத்திற்கு சென்றதாக தெரிவித்தார். இதைகேட்ட நீதிபதிகள், இன்ஸ்பெக்டரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட போலீஸ் துணை கமிஷனர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, துணை கமிஷனர் ஜெயலட்சுமி ஆஜராகி, நீதிமன்றத்திற்கு பொய்யான தகவலை தெரிவித்த இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறினார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், இன்ஸ்பெக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம். எதிர்காலத்தில் நீதிமன்றங்களில் அவர் பொய்யான தகவல் தெரிவிக்கக்கூடாது. அதற்கு ஏற்ப சின்ன தண்டனை வழங்கவேண்டும் என்று துணை கமிஷனருக்கு அறிவுறுத்தினர்.  அப்போது நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டருடன் ஆஜரான பெண் போலீஸ் பூம்பாவை அழத் தொங்கினார். இதை பார்த்த நீதிபதிகள், இன்ஸ்பெக்டர் சொல்லி அனுப்பியதைத்தான் பூம்பாவை கூறியுள்ளார். எனவே, இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இவர்தான் காரணம் என்று பூம்பாவை மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Related Stories: