தூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்

தூத்துக்குடி, மார்ச் 20: தூத்துக்குடியில் பராமரிப்பின்றி உருக்குலைந்து சின்னாபின்னமான தார்சாலைகள், ஏற்கனவே இருந்ததற்கான தடயங்களை இழந்து வருகின்றன. அத்துடன் தினமும் ஏற்படும் விபத்துகளில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

 துறைமுகம்  நகரமான தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. தொழில்நகரமான தூத்துக்குடி மாநகரானது வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 1986ம்  ஆண்டு தூத்துக்குடி தனி மாவட்டமாக உருவான நிலையில் 2008ம் ஆண்டு  தூத்துக்குடி  மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதோடு 2018ம் ஆண்டு  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. மாவட்டம் உருவானதில் இருந்து  கடந்த 35 ஆண்டுகளில் தூத்துக்குடியில் மக்கள் தொகை பன்மடங்கு  அதிகரித்துள்ள போதும் தேவையான அடிப்படை வசதிகள் கூட இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மாநகரில்  பாளை ரோடு, வி.இ.ரோடு, அண்ணாநகர் ரோடு போன்ற குறிப்பிட்ட சாலைகள் மட்டுமே  மீண்டும் மீண்டும் அமைக்கப்பட்டபோதும் தெருக்களில் சாலை வசதிகளை மேம்படுத்த எந்தவொரு  நடவடிக்கையும் இல்லை.
Advertising
Advertising

அதிலும் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட  மழைவெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், தெருக்கள் இன்று வரை போடப்படவில்லை.  தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரை அழகுப்படுத்தும் பணிக்கும்  பூங்காக்களை அமைக்கும் பணிக்கும் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. ஆனால்,  சாலை வசதிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக  தூத்துக்குடியில் பல்வேறு சாலைகள் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்  அமைப்பதற்காகவும், பல்வேறு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்காகவும்,  மின்வாரிய பணிக்காகவும் தோண்டப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  பெய்த மழையாலும் சாலையில் குண்டும், குழியுமாக மாறிவிட்டது.  காட்சியளிக்கிறது. தற்போது  அண்ணாநகர்மெயின்ரோடு, குறிஞ்சிநகர் மெயின்ரோடு, பிரையண்ட்நகர்,  மில்லர்புரம் மெயின்ரோடு, ஜார்ஜ்ரோடு பீங்கான் ஆபீஸ் சந்திப்பு, டூவிபுரம்,  காமராஜர் சாலை, உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள்  மூடப்படாமலும் அதனால் சேதமடைந்த சாலைகள் மற்றும் மழையால் சேதமடைந்த சாலைகள்  சரிசெய்யப்படாமலும் குண்டும்குழியுமாக கிடப்பதால் வாகனத்தில் செல்வோர்  அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

பக்கத்தில் வருகிற வாகனங்களை  திரும்பி பார்ப்பதற்குள் குழியில் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் தினசரி பலர் எலும்பு  முறிவு உள்ளிட்ட காயங்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுவரும் அவலநிலை  அதிகரித்து வருகிறது. தார்சாலைகள் இருந்தற்கான அடையாளங்களை இழந்துவரும்  சாலைகளினால் புழுதி பறந்து வருகிறது. இதனால் காற்றில் மாசு ஏற்பட்டு  சுகாதார சீர்கேடு உருவாகிவருகிறது. பிரதான சாலைகள் மட்டுமல்லாது,  அண்ணாநகர், டூவிபுரம், ஆசிரியர்காலனி, குறிஞ்சிநகர் உள்ளிட்ட இடங்களிலுள்ள  குறுக்கு தெருக்களில் தார்சாலைகள் அனைத்தும் மண்சாலைகளாக மாறிவிட்டது.  இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும்,  போராட்டங்கள் நடத்தியும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

சுகாதார கேடு

இதுதவிர புதிதாக  கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தரமற்ற முறையில்,  தகுந்த திட்டமிடுதல் இல்லாமல் நடந்து வருவதால் தற்போது பல இடங்களில் தேங்கிநிற்கும்  தண்ணீரால் துர்நாற்றம் வீசுகிறது. பல இடங்களில் பாதியோடு பணிகள்  நிறுத்தப்பட்டுள்ளன. வடிகால் அமைக்க குழிகள் தோண்டும்போது தண்ணீரோடு  கான்கீரிட் போடப்படுவதால் அது தரமில்லாமல் உள்ளது. இதை அதிகாரிகளும்  கண்டுகொள்வதில்லை. மேலும் பக்கிள்ஓடையில் 3வது மைல் முதல் அசோக்நகர்,  ஆசிரியர் காலனி, அண்ணாநகர், பகுதிகளில் தண்ணீர் சீராக செல்லாமல் தேங்கி  துர்நாற்றம் வீசி வருகிறது. இதில் பொதுமக்களும் கழிவுகளை கொட்டுவதால்  சுகாதார கேடு ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அவர்களும், கழிவுகளை மாநகராட்சி  குப்பை தொட்டியில் போடுவதற்கு வலியுறுத்தவேண்டும். தற்போது தொற்றுநோய் பரவி  வரும் நிலையில் இதனை எல்லாம் சரிசெய்ய எந்தநடவடிக்கையும் எடுக்காமல்  கிருமிநாசினி தெளிப்பதால் மட்டும் நோய் பரவுவதை தடுக்க முடியாது என்பதால்  இவற்றை சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: