திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

களக்காடு, மார்ச் 20: களக்காடு அருகே திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் அழகிய நம்பிராயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருவுருவங்களில் அருள் பாலித்து வருவது சிறப்புமிக்கதாகும். பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.

இந்தாண்டு திருவிழா கடந்த 10ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம் பெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5ம் நாளான கடந்த 14ம் தேதி நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10ம் நாளான நேற்று (19ம் தேதி) நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நம்பிராயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து விஷேச அலங்காரத்தில் நம்பி சுவாமிகள் தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன் பின் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் நாங்குநேரி எம்எல்ஏ நாராயணன், ரூபி மனோகரன், காங்.முன்னாள் மாவட்ட தலைவர்கள் தமிழ்ச் செல்வன், மோகன் குமாரராஜா, களக்காடு நகர தலைவர் ஜார்ஜ் வில்சன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு  அன்னதானம் வழங்கப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் களக்காடு மேரி ஜெமிதா, ஏர்வாடி ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கோவில் வளாகம், திருத்தேர் நிலையம், ரதவீதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நாளை திர்த்தவாரி நடைபெறுகிறது.

Related Stories: