×

இத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி

நெல்லை, மார்ச் 20:  நெல்லை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் 8 பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  ெதரிவித்தார்.சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நெல்லை மாவட்ட மகளிர்  திட்டத்தின் மூலம் சுயஉதவிக் குழுக்கள் முகக்கவசம் தயாரித்து வருகின்றனர். நெல்லை  புதிய பஸ் நிலையம் மகளிர் சுயஉதவிக்குழு வளாகத்தில் முகக்கவசம் தயாரிக்கும்  பணியை கலெக்டர் ஷில்பாபிரபாகர் சதீஷ் நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர்  அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல்  தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இந்த முகக்கவசங்கள்  தட்டுப்பாடின்றி கிடைப்பதற்காக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 8  இடங்களில் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த  முகக்கவசங்கள் ரூ.10க்கு விற்பனை செய்யப்படும்.  முதல் கட்டமாக  உள்ளாட்சி துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், மக்களுடன் தொடர்புடைய  அரசு ஊழியர்களுக்கும், அதன் பிறகு பொதுமக்களுக்கும் தேவையை பொறுத்து  வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை பயன்படுத்தி மருந்துக் கடைகளில் கூடுதல்  விலைக்கு முகக்கவசங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை  கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் 8 பேர்  அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இத்தாலி, பிலிப்பைன்ஸ்  போன்ற நாடுகளில் இருந்து திரும்பிய 30 பேர் வீடுகளில் தனிமையாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவுக்கு வழக்கம் போல் பஸ்கள்  இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டு விற்பனை  நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோணி பர்னாண்டோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Corona Ward ,Philippines ,Italy ,
× RELATED கொரோனா வார்டில் என்ன நடக்கிறது?!