×

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை

நெல்லை, மார்ச் 20:  நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நேற்று தெர்மோ ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல் உள்ள பயணிகளுக்கு உரிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்ற ரயில்களில் முன்பதிவு இருக்கைகள் காலியாகவே கிடந்தன. உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனோ வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. மக்கள் கூடும் இடங்களில் பலத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து ரயில் நிலையங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சோப்பு கரைசல் மூலம் கைகளை கழுவிய பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பழைய கட்டிட வாசலில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த கைகளை கழுவுதற்கான வசதிகள் நேற்று காமராஜர் சிலை அருகேயும், புதிய கட்டிட நுழைவாயில் பகுதியிலும் விஸ்தரிக்கப்பட்டது.

நேற்று மாலையில் நெல்லை ரயில் நிலையத்திற்கு ரயில்கள் ஏறச்செல்லும் அனைத்து பயணிகளும் தெர்மோ ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தெர்மோ ஸ்கேனர் பரிசோதனை, கொரோனா நோய் தடுப்பு துண்டு பிரசுரங்கள் வினியோகம் ஆகியவற்றை ரயில் நிலைய மேலாளர் இளங்கோவன் நேற்று தொடங்கி வைத்தார். இதில் ரயில் நிலைய துணை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் இன்ஸ்பெக்டர் சிவசங்கர நாராயணன், உதவி கோட்ட பொறியாளர் முத்துக்குமார், ரயில்வே சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ரயில்வே போலீசார் தரப்பில் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், எஸ்ஐக்கள் முத்தமிழ்செல்வன், சுரேஷ், சிறப்பு எஸ்ஐ கிருஷ்ணன், ஆர்பிஎப் சார்பில் இன்ஸ்பெக்டர் கிரண், எஸ்ஐ  மாரியப்பன், நெல்லை மாநகராட்சி சுகாதார அதிகாரி சதீஷ்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜம்முதாவியில் இருந்து நேற்று நெல்ைல வந்த ரயிலில் இறங்கிய ஒவ்வொரு பயணிக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுஒருபுறமிருக்க 2வது நாளாக நேற்றும் நெல்லை ரயில்கள் காலியாகவே சென்றன. நெல்லை எக்ஸ்பிரஸ், தாதர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களிலும் காலி இருக்கைகள் காணப்பட்டன. இந்த ரயில்களில் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியல் 200ஐ தாண்டி காணப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக பலர் தங்கள் பயணத்தை ரத்து செய்ததால் நேற்று ரயில்களில் அதிக இருக்கைகள் காலியாக காணப்பட்டன.

நெல்லை எக்ஸ்பிரசில் 500 இருக்கைகள் காலி
நெல்லையில் இருந்து நேற்று சென்னைக்கு புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரசில் 2ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட இருக்கைகள் 216 காலியாக இருந்தது. 3அடுக்கு ஏசி பெட்டியில் 277 இருக்கைகளும், இரண்டடுக்கு ஏசி பெட்டியில் 27 இருக்கைகளும் காலியாயின. இவை அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு, கொரோனா அச்சத்தால் ரத்து செய்யப்பட்டதாகும். நெல்லையில் இருந்து தாதர் சென்ற ரயிலிலும் ஸ்லிப்பர் பெட்டிகளில்217 இருக்கைகளும், 3 அடுக்கு ஏசி பெட்டியில் 138 இருக்கைகளும், இரண்டடுக்கு ஏசி பெட்டியில் 29 இருக்கைகளும் காலியாக இருந்தன.

இத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்புகொரோனா வார்டில் 8 பேர் அனுமதி
நெல்லை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் 8 பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  ெதரிவித்தார். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. = நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நெல்லை மாவட்ட மகளிர்  திட்டத்தின் மூலம் சுயஉதவிக் குழுக்கள் முகக்கவசம் தயாரித்து வருகின்றனர். நெல்லை  புதிய பஸ் நிலையம் மகளிர் சுயஉதவிக்குழு வளாகத்தில் முகக்கவசம் தயாரிக்கும்  பணியை கலெக்டர் ஷில்பாபிரபாகர் சதீஷ் நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர்  அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

 நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல்  தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இந்த முகக்கவசங்கள்  தட்டுப்பாடின்றி கிடைப்பதற்காக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 8  இடங்களில் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த  முகக்கவசங்கள் ரூ.10க்கு விற்பனை செய்யப்படும்.  முதல் கட்டமாக  உள்ளாட்சி துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், மக்களுடன் தொடர்புடைய  அரசு ஊழியர்களுக்கும், அதன் பிறகு பொதுமக்களுக்கும் தேவையை பொறுத்து  வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை பயன்படுத்தி மருந்துக் கடைகளில் கூடுதல்  விலைக்கு முகக்கவசங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை  கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் 8 பேர்  அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இத்தாலி, பிலிப்பைன்ஸ்  போன்ற நாடுகளில் இருந்து திரும்பிய 30 பேர் வீடுகளில் தனிமையாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவுக்கு வழக்கம் போல் பஸ்கள்  இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டு விற்பனை  நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோணி பர்னாண்டோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : passengers ,paddy junction train station ,
× RELATED ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்ப சோதனை மையம் அமைக்க நடவடிக்கை