×

மார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது

நெல்லை,  மார்ச் 20: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் 31ம் தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என செயல் அலுவலர் அம்ரித் அறிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ஏதுவாக அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் சுற்று வட்டார வளாகத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வரிசை பகுதியில் உள்ள கம்பிகள், தங்கும் மண்டபங்கள், காவடி மண்டபம், கல்யாண மண்டபம், கிரிபிரகார மண்டபம்  ஆகிய பகுதிகளில் தினமும் இருமுறை கிருமி நாசினி  தெளிக்கப்படுகிறது. இதே போல் பொது தரிசன பகுதிகளிலும், சண்முகவிலாச மண்டப நுழைவு பகுதியிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கோயிலுக்கு வருகைதந்த பக்தர்களை வெப்பநிலை மானி மூலம் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை  செய்தபிறகே தரிசனத்துக்கு செல்ல மருத்துவத்துறையினர் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது. தரிசனத்திற்கு செல்லும் முன்பாக கையை கழுவ ஏதுவாக சண்முகவிலாச  மண்டபம் முன்பும் மற்றும் ரூ.20 சிறப்பு தரிசன வழி, பொது தரிசன வழியில்  முகப்பில் வாஷ்பேஷன் வசதி செய்திருந்தனர். நுழைவுவாயில் பகுதியில் வாகனங்களுக்கு கோயில் விசை தெளிப்பான் மூலம்  கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டதோடு கொரோனா வைரஸ் குறித்து கோயில் மைக் மூலம் அவ்வப்போது எச்சரிக்கை  அறிவிப்பு செய்யப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு  அறிவிப்புகள் கோயில் வளாகம், பக்தர்கள் தங்கும் விடுதி, மூடி காணிக்கை  மண்டபம், அன்னதான மண்டபம், சண்முகவிலாச மண்டபம், கோயில் அலுவலங்களில்  போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய பணிகளை திருக்கோயில் செயல்  அலுவலர் அம்ரித், கோயில் உதவி ஆணையாளர் செல்வராஜ்,  கண்காணிப்பாளர்கள்,  ராமசுப்பிரமணியம், மாரிமுத்து, ராஜ்மோகன் உள்ளிட்டோர்  நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அதே வேளையில்   சித்த  மருத்துவக்குழுவினர் டாக்டர் ரவி தலைமையில் தொடர்ந்து மருத்துவ   பரிசோதனையில் ஈடுபட்டனர்.  இதனிடையே  பக்தர்களுக்கு இருமல் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று காலை அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் திருக்கோயில் செயல்  அலுவலர் அம்ரித் சார்பில் நேற்று மாலை கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில்,  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் 31ம் தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், இருப்பினும் வழக்கம் போல் 9 கால பூஜைகள்  தினமும் நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Darshan ,Thiruchendur Murugan Temple ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில்...