×

தச்சநல்லூரில் 2 மாதங்களாக குடிநீர் சப்ளை ‘கட்’ பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை

நெல்லை, மார்ச் 20: நெல்லை அருகே தச்சநல்லூர் உலகம்மன்கோவில் வடக்கு தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த இரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம், கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.  மாநகராட்சி லாரிகள் மூலமும் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்காததால் குடிநீருக்காக அப்பகுதி பொதுமக்கள் திண்டாடி வந்தனர். சீரான குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்தும், லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்புலிகள் அமைப்பு மாடசாமி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் தச்சநல்லூரில் உள்ள வார்டு அலகு அலுவலகத்தை நேற்று காலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்க வந்து  போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு வந்த மாநகராட்சி அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் போராட்டம் தொடர்பாக பேசினார். இதையடுத்து தற்காலிகமாக மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கலைந்து சென்றனர். காலை 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் நடந்த ேபாராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED குடிநீர் விநியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்