ஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்

தஞ்சை, மார்ச் 20: பயணிகளுக்கு ஒரே இடத்தில் பரிசோதனை செய்யும் வகையில் தஞ்சை ரயில் நிலையத்தின் பின்பக்கம் நுழைவு வாயில், சுரங்கப்பாதை மூடப்பட்டது. இது வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தஞ்சை ரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பயணிகளை பரிசோதனை செய்து வருகின்றனர். தஞ்சை ரயில் நிலையத்தில் 2 நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த 2 வாயில்கள் வழியாகவும் தினமும் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்து செல்வர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பயணிகள் அனைவருக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலையத்தின் பின்பக்க நுழைவு வாயிலை மூட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள நுழைவாயிலை சுற்றி ஏராளமான பேரிகார்டு வைக்கப்பட்டு அந்த வழி அடைக்கப்பட்டது. இதேபோல் ரயில் நிலைய நடைமேடைகளில் உள்ள சுரங்கப்பாதையும் பேரிகார்டு வைத்து மூடப்பட்டது. மேலும் அந்த பகுதியில் தஞ்சை பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பக்க வழியாக மட்டுமே பயணிகள் செல்ல அறிவுறுத்தினர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது: தஞ்சை ரயில் நிலையத்தில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் வந்து செல்வதற்கு ஒரே வழி இருந்தால் ஒரே நேரத்தில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய எளிதாக இருக்கும் என்பதால் பின்பக்க நுழைவுவாயில் மற்றும் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை இந்த விதிமுறை அமலில் இருக்கும். அதன்பிறகு ரயில்வே நிர்வாகம் எடுக்கும் முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கட்டுப்பாட்டு அறை திறப்பு: பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையை பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி திறந்து வைத்தார். தலைமை இடத்து துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், கிள்ளி வளவன், வருவாய்த்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தாசில்தார் ஜெயலட்சுமி கூறுகையில், பேராவூரணி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தாசில்தார் நிலை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர், மருத்துவர்கள், காவல்துறை அலுவலர் உள்ளிட்ட 4 பேர் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா நோய்தொற்று குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04373-232456 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: