×

பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு

நாகை,மார்ச்20: பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிக்கப்படுகிறது என்று நாகை கலெக்டர் பிரவீன்பிநாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக நாகை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் பிரவீன்பிநாயர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நாகை ரயில் நிலையத்திற்கு வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரயில் பயணிகளுக்கு உடல்களை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ரயில் நிலையத்தில் இருந்து வெளியே அனுமதிக்கப்பட்டனர். நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருத்துவக்குழுக்களில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை குறித்தும் கலெக்டர் பிரவீன்பிநாயர் கேட்டறிந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து நாகை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், தேவையானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்து நுழைவு பகுதிகளிலும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு உபகரணங்களான முகமூடிகள் (மாஸ்க்குகள்) தடையின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட ஏதுவாக சுய உதவிக்குழுக்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க்குகள் தயாரிக்கும் பணி கூடுதல் கலெக்டர் மேற்பார்வையில் தீவிரமாக நடந்து வருகிறது.

பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கைகளை சுத்தப்படுத்துவதற்கான மருத்துவ பொருட்கள் அரசு மருத்துவ மனையிலேயே தயாரிக்கப்பட்டு தேவைப்படும் இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் முகமூடிகள், மருத்துவ பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மற்றும் வைரஸ் தொற்று குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை பரப்புவோர் குறித்து பொதுமக்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் கலெக்டர் பிரசாந்த், நாகை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், நிலைய மருத்துவ அலுவலர் முருகப்பா, மாவட்ட கொள்ளை நோய் ஒழிப்பு அலுவலர் லியாகத்அலி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : public ,
× RELATED மாணவர்கள் பலியான விவகாரத்தை தாமாக...